இலங்கை -கிழக்குப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது!

பல்கலைக்கழக பாரம்பரியம் என்பது மிகவும் கௌரவம் மிக்கதாகப் பார்க்கப்பட்டு வருகின்றதொரு விடயமாகும். ஆனாலும் இவ்வாறான பெரியளவான குழப்பங்கள் வடக்குக்கிழக்கு தவிர்ந்த மாகாணங்களில் இடம் பெறுவதில்லை என்றே கூறவேண்டும்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் கிழக்குப் பல்கலைக்கழத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற போது மாத்திரம் ஏன் பிரச்சனைகள் உருவாகின்றன என்று ஆராய்வதுமுக்கயமானதாகும்.

தற்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாகக்கட்டடத் தொகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்புரீதியில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் விடயங்கள் சம்பந்தமாகப் பார்க்கின்ற போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம் நாட்டில் இல்லை. அவர் இப்போது கனடா நாட்டில் இருக்கிறார்.

கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வில்லை.

சிலருடைய கேள்வி யுத்தம் நடைபெற்ற வேளையில் 1990களில் அகதி முகாமாக இருந்தபோது கூட இவ்வளவு மோசமாக கிழக்குப் பல்கலைக்கழகம் இருந்ததில்லை. ஆனால் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது.

நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இல்லாத சட்டமா இங்கிருக்கிறது. பொலிஸ் காவலரண், காவலாளிகள், சுற்றிவர மதில் வீடியோ கமராக்கள் இருக்கும் போது எப்படி மாணவர்களால் இவ்வளவுக்கு வன்முறையாக நடந்து கொள்ள முடிகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம் பதில் கூறுமா.

பல்கலைக்கழகப்பிரச்சினையாக இருந்தாலும் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற ரீதியில் அது மக்களுடைய சொத்தாகும். மக்களுக்கும் நாளைய சமுதாயத்திற்கும் நல்ல விடயங்களைப் போதிக்கவேண்டியவர்கள் நடந்து கொள்ளும் முறை குறித்த விமர்சனமே இதுவாகும்.

 

அடுத்ததாக ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் என்ன விதிவிலக்கு.

அப்படியானால் நம்முடைய பிரதேசங்களிலிருந்தும் வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்றிருக்கின்ற மாணவர்கள் அனைவரும் இனிமேல் வேறு இடங்களில் பணம் செலுத்தித் தங்க வேண்டி ஏற்படாது என்றும் பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கெல்லாம் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் உப வேந்தருமான ரி. ஜெயசிங்கம் தான் பதில் சொல்ல வேண்டும்.