மது போத்தல்களுக்கும் உணவு பொட்டலங்களுக்கும் அடிமையான போலி மக்கள் சக்தியைக் காட்ட முனையும் கூட்டு எதிரணி-பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

மது போத்தல்களுக்கும் உணவப் பொட்டலங்களுக்கும் மயங்கும் ஒரு போலியான மக்கள் பலத்தைக் காட்டவே பொது எதிரணி முயலுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஒருகொடவத்தை மஜீத் பிளேஸில் உள்ள அல் ஹனீபா பள்ளி வாசலுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கதிரைகளை அன்பளிப்புச் செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு இடத்தில் பேசும் போது யார் தன்னை அரசியலில் இருந்து விரட்ட நினைத்தாலும் சரி தன்னை அரசியலில் இருந்து விலக்குவது பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் இந்த நாட்டு மக்களே என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த 2015 ஜனவரி எட்டாம் திகதி அந்த முடிவை மக்கள் ஏற்கனவே எடுத்து விட்டனர். ஓய்வு பெற்று மெதமுலன வீட்டுக்கு மக்கள் அவரை அனுப்பிவிட்டனர். அப்படி சென்ற அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அதிலும் அவர் தோற்றுப் போனார். அதற்கு பின்னரும் அவர் மக்கள் கருத்தை மதிக்காமல் இருக்கின்றார். மீண்டும் மூன்றாவது தடவையாக நாம் அவரை மாகாண சபை தேர்தலில் தோற்கடிப்போம். அதிலும் தோல்வி அடைந்த பின்னர் வேண்டுமானால் பெலியத்தை கூட்டுறவு சங்கத்துக்கு போட்டியிடலாம். விமலும் கம்மன்பிலவும் இணைந்து மகிந்த ராஜபக்ஷவை பொம்மலாட்ட பொம்மை ஆக்கிவிட்டனர். அவர்களின் பொம்லாட்ட தாளத்துக்கு தான் அவர் தற்போது ஆடிக் கொண்டிருக்கின்றார். அவர் இரண்டாவது தடவையாக பதவியேற்கும் போது கூறிய விடயம். இந்த நாட்டு மக்கள் என்னை இரண்டு தடவைகள் நாட்டின் அதி உயர் பதவியில் அமர்த்தி விட்டனர். இனி அடுத்து நான் ஓய்வு பெற்று மெதமுலனைக்கு சென்று நிம்மதியாக இருக்க வேண்டும். அதுதான் எனது அடுத்த வெற்றி என்றார். அதை அப்படியே அவர் கடை பிடித்திருந்தால் இன்று அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.
இந்த அரசு முன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசு. மகிந்த அன்றைய காலத்தில் வழங்கியது போல் தவறான வரப்பிரசாதங்களை வழங்கி உருவாக்கப்பட்டது அல்ல இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இரண்டு பிரதான கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து உருவாக்கியதே இந்த பெரும்பான்மை. ஜனவரி எட்டுக்கு முன் மங்கிப் போயிருந்த ஜனநாயகத்தை நாம் மீண்டும் கட்டி எழுப்பியுள்ளோம். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஊடகங்கள் இன்று சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் தமது பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு அடிப்படை சம்பம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களைப் பற்றி எல்லாம் பொது எதிரணி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இவ்வாறு கூச்சலிடுபவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் மடையர்கள் அல்ல என்பதை நாம் நினைவு படுத்த வேண்டும். இந்த நாட்டு மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. மக்கள் அமைதியாக எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் கலாசாரத்துக்குப் பழகிப் போன, மது போத்தலுக்கும் உணவுப் பொட்டலத்துக்கும் கூச்சலிடுகின்ற ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு போலியான மக்கள் சக்தி ஒன்றை காட்ட முனைகின்றனர். இதற்கு எதிராக உண்மையான மக்கள் பலத்தை வீதியில் இறக்கி காட்ட எங்களாலும் முடியும் என்றார்.